திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஐந்தாம் திருமுறை |
5.36 திருச்செம்பொன்பள்ளி (செம்பொனார் கோயில்) - திருக்குறுந்தொகை |
கான றாத கடிபொழில் வண்டினந்
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊன றாததோர் வெண்டலை யிற்பலி
தான றாததோர் கொள்கையன் காண்மினே.
|
1 |
என்பும் ஆமையும் பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.
|
2 |
வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே.
|
3 |
அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்
திருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.
|
4 |
பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்
ஏவ லாலெயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.
|
5 |
சலவ ராயொரு பாம்பொடு தண்மதி
கலவ ராவதன் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவி லாலெயில் மூன்றெய்த கூத்தரே.
|
6 |
கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த ராகி இருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோர் ஐந்தலை நாகமே.
|
7 |
வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.
|
8 |
நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.
|
9 |
திரியு மும்மதில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன லோட்டி இலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்
அரிய வானம் அவரருள் செய்வரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |